மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நாளை நடக்கிறது

சந்திர கிரகணம் பவுர்ணமியில் வருவதால் மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நாளை நடக்கிறது.
மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நாளை நடக்கிறது
Published on

ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று நவக்கிரகங்களில் 'சந்திரன்' தனது சாபம் முழுமையாக தீர்ந்து, 16 கலைகளுடன், பூமிக்கு அருகில் வந்து முழு பொலிவுடன் காட்சி அளிக்கும். முழுமையான ஒளியுடன் இருக்கும் அன்றைய நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக அரிசியை வடித்து சோறாக மாற்றி ஈசனுக்கு லிங்க திருமேனியில் அன்னத்தால் அபிஷேகம் (அன்னாபிஷேகம்) செய்யப்படுகிறது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த ஆண்டு சந்திர கிரகணம் பவுர்ணமியில் வருவதால் கோவில்களில் நாளை (திங்கட்கிழமை) அன்னாபிஷேகம் கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி 7-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.53 மணிக்கு தொடங்கி வருகிற 8-ந் தேதி மாலை 4.59 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. பவுர்ணமியில் தான் அன்னாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது நியதி. ஆனால் இந்த ஆண்டு பவுர்ணமி அன்று சந்திரகிரகணம் வருகிறது. எனவே தமிழகத்தில் உள்ள சிவாலயங்களிலும், குறிப்பாக சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோவில், திருவேற்காடு வேதபுரீசுவரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நாளை அன்னாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் நாளை மாலையில் அன்னாபிஷேக தரிசனம் செய்யலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னம், பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com