அண்ணாமலை புகார் கூறிய நிறுவனத்துக்கு டெண்டர் இல்லை - மருத்துவத்துறை விளக்கம்

ஊட்டச்சத்து பெட்டகம் விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தேர்வாகும் என்று கூறிய நிறுவனம் டெண்டர் பெறவில்லை,தகுதி அடிப்படையில் வேறு நிறுவனம் டெண்டரை கைப்பற்றியது.
அண்ணாமலை புகார் கூறிய நிறுவனத்துக்கு டெண்டர் இல்லை - மருத்துவத்துறை விளக்கம்
Published on

சென்னை,

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு, ஊட்டச்சத்து மாவு, ஆவின் நெய், பேரீச்சம்பழம், இரும்பு சத்து டானிக் உள்பட 8 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசு விடுத்த டெண்டரில் முறைகேடு நடந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

மேலும், ஊட்டச்சத்து பெட்டகங்களில் உள்ள எல்லா பொருட்களையும் சப்ளை செய்வதற்கான டெண்டரில் விதிமுறைகளை மீறி 'அனிதா டெக்ஸ்காட்' என்ற தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஊட்டச்சத்து பெட்டக முறைகேடு தொடர்பாக அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார். மேலும், விதிமுறைகளின்படி ஊட்டச்சத்து பெட்டகத்துக்கான டெண்டர் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இந்தநிலையில், ஊட்டச்சத்து பெட்டகத்துக்கான டெண்டர் இன்று திறக்கப்பட்டது. அதில், தகுதியின் அடிப்படையில் 'ஸ்ரீ பாலாஜி சர்ஜிக்கல்ஸ்' என்ற நிறுவனம், ஊட்டச்சத்து பெட்டகத்தில் அடங்கிய 8 பொருட்களை சப்ளை செய்வதற்கான டெண்டரை பெற்றிருக்கிறது. ஊட்டச்சத்து பெட்டகத்தை சப்ளை செய்வதற்கான டெண்டரில் 'அனிதா டெக்ஸ்காட்' நிறுவனம் தான் தேர்வாகும் என்று அண்ணாமலை கூறிய நிலையில், அதற்கு முரண்பாடாக டெண்டரை தற்போது வேறு நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும், ஆவின் நிறுவனம் நெய்க்கு 12.6 சதவீத விலை அதிகரிப்பு கோரியிருந்த நிலையில், ஊட்டச்சத்து பெட்டகம் சப்ளை செய்பவரின் விலை 2019-ம் ஆண்டில் இருந்த விகிதங்களை விட 9.6 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

இது வழக்கமான ஆண்டு விலை உயர்வை விடவும் குறைவானது ஆகும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com