

கன்னியாகுமரி,
'வி த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 'கடற்கரை தூய்மை இயக்கம்' கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணியை 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் கே.அண்ணாமலை நேரில் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி தொடங்கி திருநெல்வேலியின் உவரி, தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு மற்றும் திருச்செந்தூர் ஆகிய கடலோரப் பகுதிகளில் இந்தத் தூய்மைப் பிரசார இயக்கம் தொடர்ந்து தீவிரமாக நடைபெறவுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளை அகற்றி, கடலோரச் சூழலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் தூய்மைப் பணியில் 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் மீனவச் சமூகத்தினர் திரளாகக் கலந்துகொண்டு கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியைத் தொடர்ந்து, அப்பகுதி மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் அண்ணாமலை கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் வாழ்வாதாரச் சவால்களையும் கேட்டறிந்தார்.
'வி த லீடர்ஸ்' இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான திறன் பயிற்சி போன்ற ஆறு முக்கிய தலைப்புகளில் மக்கள் சார்ந்த களப்பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த மாநிலம் தழுவிய கடற்கரை தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.