

மதுரை,
தமிழ்நாட்டில் வருகிற 23-ந் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் நான்காவது முறையாக செல்லூர் ராஜு போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் முக்குலத்தோர், பிள்ளை, செட்டியார், யாதவர் மற்றும் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமான அளவில் வாழ்ந்து வருகின்றனர். இதில் முக்குலத்தோர் சுமார் 30% மற்றும் பிள்ளைமார் சுமார் 15% இருப்பதால், தேர்தல் முடிவை தீர்மானிக்கும் முக்கிய சமூகங்களாக பார்க்கப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு தொகுதியில் தனக்காக பிரசாரம் மேற்கொள்ள வந்த அண்ணாமலை குறித்து பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பாஜக இன்று பட்டிதொட்டியெங்கும் வளர்ந்துள்ளது என்றால் அதற்கு காரணம் அண்ணாமலையின் சிறப்பான பணியாகும். அண்ணாமலை நாளை என்ன அறிக்கை கொடுப்பாரோ, என்ன பேட்டி கொடுக்கப்போகிறாரோ என மடியில் நெருப்பை கட்டி கொண்டு அமைச்சர்கள் இருந்தார்கள். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது சிங்கமாக, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக அண்ணாமலை இருந்தார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.