

தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் மண்டல் ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என இந்தியில் உள்ள வார்த்தை அப்படியே ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
முதல் அமைச்சர் முக ஸ்டாலினும் கடும் கண்டத்தை தெரிவித்து இருந்தார். பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்! இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.! 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான இந்தி திணிப்பு செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!” என்று காட்டமாக சாடியிருந்தார்.
இந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: -எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா? இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?” என்று பதிவிட்டுள்ளார்.