

அண்ணாமலை நடைபயணத்தால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது என தஞ்சையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
பேட்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி நீர் இல்லாததால் ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் வரையிலான ஏக்கரில் நெற்பயிர்கள் கருகிவிட்டன. இதனால் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளது.
சுப்ரீம்கோர்ட்டில் தமிழகஅரசு மனு தாக்கல் செய்துள்ளதால் கோர்ட்டுக்கு பயந்து தற்போது கர்நாடகஅரசு 10 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தருவதாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல. கர்நாடகாவின் பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது எனக் கூறி போராட்டத்தை அறிவித்துள்ளார். இதற்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. ஏன் வாய் திறக்கவில்லை.
ஊழல்
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் மத்திய அரசின் சி.ஏ.ஜி. என்கிற ஆடிட்டர் ஜெனரல் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் 7 ஊழல்கள் அம்பலப்பட்டுள்ளன. இந்த ஒரு அறிக்கையில் மட்டுமே பா.ஜ.க. ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் செய்திருப்பது வெளிவந்துள்ளது. இதற்கு காரணமான நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அண்ணாமலை நடைபயணத்தால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது.
தமிழ்நாட்டில் நான்குநேரி, வேங்கைவயல், கோவில்பட்டி, அணைக்கரை என தாழ்த்தப்பட்ட, பட்டியல் இன மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடந்து வருகிறது.. எனவே தமிழகஅரசும், போலீஸ்துறையும் உரிய நடவடிக்கை எடுத்தால் அடுத்தடுத்து சம்பவங்கள் நடக்காது.
போராட்டம்
மணிப்பூர் பிரச்சினை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்சினைக்காக மத்தியஅரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அடுத்தமாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை பிரசார இயக்கம் நடக்கிறது. பிரசார இயக்கத்தின் நிறைவு நாளான 7-ந் தேதி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டமும், ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற உள்ளது. இதில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.