ஆனிப்பெருந்திருவிழா: நெல்லையப்பர் கோவிலில் இன்று தேரோட்டம்


ஆனிப்பெருந்திருவிழா: நெல்லையப்பர் கோவிலில் இன்று தேரோட்டம்
x

தேரோட்டத்தையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை,

நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவில் சுவாமி -அம்பாள் வீதிஉலா மற்றும் சிறப்பு பூஜைகள், பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

விழாவில் நேற்று காலை சுவாமி நடராஜ பெருமாள் பச்சை சாத்தி வீதிஉலா வந்தார். மாலை சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கங்காளநாதருக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். இரவு 10 மணிக்கு தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் தேர் கடாட்சம் உலாவும் ரதவீதியும் சென்றனர். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் உள்ளன. 5 தேர்களும் அலங்காரம் செய்யப்பட்டு, புதிய வடங்களும் இணைக்கப்பட்டு உள்ளன. வாழை தோரணங்களும் கட்டப்பட்டு உள்ளன. இதையொட்டி டவுன் 4 ரதவீதிகளிலும் புதிதாக தார் ரோடு போட்டு சீரமைக்கப்பட்டு உள்ளது.

இன்று அதிகாலையில் சுவாமி, அம்பாள் அந்தந்த தேர்களில் எழுந்தருளுகிறார்கள். காலை 8 மணி அளவில் சுவாமி நெல்லையப்பர் தேரை சபாநாயகர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.

முன்னதாக அதிகாலையில் விநாயகர், முருகர் தேர்கள் இழுக்கப்பபடுகிறது. சுவாமி தேரை தொடர்ந்து அம்பாள் தேர் இழுக்கப்படுகிறது. இறுதியாக சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் ரதவீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் நெல்லை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 300-க்கும் மேற்பட்ட கண்காமிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் 3 டிரோன்களும் பயன்படுத்தப்படுகிறது. ரதவீதிகளில் 16 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்

தேரோட்டத்தையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. டவுன் பஸ்கள் ரதவீதி பகுதிக்குள் வராமல், மாநகராட்சி எதிரே உள்ள பொருட்காட்சி திடல் தற்காலிக பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும். தென்காசி, ஆலங்குளம், சுரண்டை, கடையத்தில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையம் வருகிற பஸ்கள் பழைய பேட்டை, கண்டியபேரி சாலை வழியாக ராமையன்பட்டி, சத்திரம் புதுக்குளம், சங்கரன்கோவில் ரோடு, தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை வழியாக புதிய பஸ் நிலையம் செல்ல வேண்டும். இந்த வழித்தடத்தில் சந்திப்புக்கு வருகிற டவுன் பஸ்கள் ராமையன்பட்டி சந்திப்பில் இருந்து வலதுபுறமாக திரும்பி குருநாதன் கோவில் விலக்கு, தச்சநல்லூர் பஜார், ராம் தியேட்டர் வழியாக சந்திப்புக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story