‘செம்மொழி இலக்கிய விருது’ தொடர்பான அறிவிப்பு - எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு


‘செம்மொழி இலக்கிய விருது’ தொடர்பான அறிவிப்பு - எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு
x

‘செம்மொழி இலக்கிய விருது’ இலக்கிய உலகின் பன்முகத்தன்மையை செழுமைப்படுத்தும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

சென்னை,

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் ஆண்டுதோறும் வெளியாகும் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் மொழி வாரியாக ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்திய இலக்கிய உலகில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த அறிவிப்பு, பல மொழி எழுத்தாளர்களுக்கு புதிய அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் மைல்கல் நிகழ்வாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தற்போது சாகித்ய அகாடமி போன்ற தேசிய இலக்கிய விருதுகளில் கூட மத்திய அரசின் அரசியல் தலையீடு, குறுகிய நோக்கம், தாமதங்கள் மற்றும் ரத்து போன்ற ஆபத்தான போக்குகள் தொடர்ந்து காணப்படுகின்றன. இத்தகைய சூழலில், தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் இந்த ஆக்கப்பூர்வமான முன்மாதிரி மாற்று முயற்சி மிகுந்த காலத்தேவையாக உள்ளது. இது இலக்கியத் தரம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, படைப்பாளிகளின் சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சியான இந்த அறிவிப்பின்படி, ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக தகுதிவாய்ந்த, புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விமர்சகர்கள் அடங்கிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டு, முற்றிலும் வெளிப்படையாகவும் நியாயமாகவும் தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு விருதுக்கும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இலக்கியம், படைப்பாற்றல், மொழி பன்முகத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிப்பதோடு, இந்தியாவின் பல்வேறு மொழிகளிடையே பரஸ்பர மரியாதை, மொழிபெயர்ப்பு, கலாசார பரிமாற்றத்தை வலுப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. இலக்கியம் எல்லைகளற்றது; அது மக்களை இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது என்பதை மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த விருது அமையும்.

இந்திய இலக்கிய உலகின் பன்முகத்தன்மையை மேலும் செழுமைப்படுத்தும் இத்தகைய தேசிய அளவிலான, உள்ளடக்கமான முன்னெடுப்பை மேற்கொண்டதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story