

தேனி,
தேனி மாவட்டத்தின் தமிழக-கேரள எல்லைப் பகுதியாக கம்பம் மெட்டு அமைந்துள்ளது. கம்பத்திலிருந்து சுமாா் 13 கி.மீ. தொலைவில் உள்ள இந்த மலைச் சாலை வழியாக கேரள மாநிலத்தின் கட்டப்பனை, நெடுங்கண்டம், இடுக்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், தமிழகப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளா்களும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி கேரளத் தோட்டப் பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனா்.
இந்தநிலையில், மழைக்காலங்களில் அடிக்கடி சேதமடையும் இந்தச் சாலையை, சிமென்ட் சாலையாக மாற்றும் பணி நடைபெற உள்ளது. கம்பத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் கம்பம் மெட்டு சாலை பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜூன் 8) முதல் ஒரு மாதத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று ஏற்பாடாக குமுளி மலைச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த நெடுஞ்சாலைத்துறை அறிவுறுத்தி உள்ளது. சாலை மேம்பாட்டுப் பணிகள் தடையின்றி நடைபெற பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, கம்பத்திலிருந்து கம்பம்மெட்டுச் செல்லும் அனைத்து வாகனங்களும் கூடலூா், குமுளி, சக்குப்பள்ளம், அணைக்கரை, புற்றடி, ராஜகண்டம் வழியாகச் செல்லாம்.
இதேபோல, கம்பம்மெட்டிலிருந்து கம்பம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் ராஜகண்டம், புற்றடி, அணைக்கரை, சக்குப்பள்ளம், குமுளி, கூடலூா் வழியாக செல்லலாம்.