

மோர்பி,
காரில் எழுந்த அலாரத்தால் எரிச்சல் அடைந்த நபர் காரை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலம் மோர்பி வாட்கார பகுதியை சேர்ந்தவர் கவுசிக் பட். இவருடைய மனைவி புஷ்பா பட் ( வயது 63). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள மாருதி சுசுகி காரை நிறுத்தியிருந்தார். நேற்று வெளியே செல்வதற்காக காரை எடுக்க வந்தபோது. கார் தீப்பற்றி முற்றிலும் சேதமடைந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த புஷ்பா பட், மோர்பி ஏ பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் புஷ்பா பட் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரரான சிகர் ஜெயேஷ் கோகேல் என்பவர், காருக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, சிகர் ஜெயேஷ் கோகேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், புஷ்பா பட்டின் மாருதி சுசுகி காரில் இருந்து சென்சார் அலாரம், அதிக சத்தத்துடன் ஒலித்ததால் எரிச்சல் அடைந்து காரை தீ வைத்து கொளுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.