சென்னையில் சொத்துவரி மேலும் 6 சதவீதம் உயர்வு: மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது - ராமதாஸ்

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6 சதவீதம் உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6 சதவீதம் உயர்த்தப்படவுள்ளது. மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே, கடந்த 2022-ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப்பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும்.

மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக்கூறி வெற்றி பெற்ற தி.மு.க. அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. தி.மு.க.வுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com