

சென்னை,
தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பட்டால், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2-வது டோஸ் தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. மேலும், படிப்படியாக மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 72,03,950 தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன.
இந்தநிலையில் நேற்று, மேலும், 7 லட்சத்து 55 ஆயிரத்து 530 தடுப்பூசிகள் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் 5 லட்சத்து 89 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 1 லட்சத்து 66 ஆயிரத்து 530 கோவேக்சின் தடுப்பூசியும் அடங்கும். இந்த தடுப்பூசிகள் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. அந்தவகையில் இதுவரை மொத்தம் 79 லட்சத்து 59 ஆயிரத்து 480 தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன.