தூத்துக்குடி-வியட்நாம் இடையே மேலும் ஒரு நேரடி சரக்கு கப்பல் சேவை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் கப்பல் போக்குவரத்தில் சிறந்து விளங்கி வருகிறது.
தூத்துக்குடி-வியட்நாம் இடையே மேலும் ஒரு நேரடி சரக்கு கப்பல் சேவை
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி-வியட்நாம் இடையே மேலும் ஒரு நேரடி சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மீண்டும் நேரடி கப்பல் சேவை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் கப்பல் போக்குவரத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இந்த துறைமுகத்தில் இருந்து வியட்நாம் நாட்டுக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை உள்ளது. தற்போது வியட்நாம்-தூத்துக்குடி இடையே மேலும் ஒரு சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதாவது வியட் நாம் நாட்டில் இருந்து 'எம்.வி.ஹையான் ஆல்பா' என்ற சர்வதேச சரக்கு கன்டெய்னர் கப்பல் முதல் முறையாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது.

வரவேற்பு

இந்த கப்பலை வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத் தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன், போக்குவரத்து மேலாளர் சுதிப்தா பானர்ஜி, தக்சின் பாரத் கேட்வே முனையத்தின் தலைமைச் செயல் அதிகாரி செந்தில்குமார் சுப்பிரமணியன், மும்பை சாம்சாரா குழுமத்தின் பொது மேலாளர் பசி முகமது ஹனீப் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த கப்பலில் 823 கன்டெய்னர்கள் கையாளப்பட்டன. இதில் தனியார் மின்சார கார் உற்பத்தி நிறுவனத்துக்கான 723 கன்டெய்னர்களும், கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பப்பட வேண்டிய 100 கன்டெய்னர்களும் அடங்கும்.

வழித்தடம்

இதுகுறித்து வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகு மார் புரோகித் கூறியதாவது:-

தூத்துக்குடிக்கு வந்துள்ள கப்பல், 1,781 கன்டெய்னர்களை கையாளும் திறன் கொண்டது. 171.90 மீட்டர் நீளமும், 28.40 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல், சாம்சாரா ஷிப்பிங் நிறுவனத்தால் இயக்கப்படும் சென்னை வியட்நாம் கப்பல் சேவையின் கீழ் செயல்படுகிறது. இந்த கப்பல் சேவையானது தூத்துக்குடி-சென்னை (இந் தியா), ஹோ சி மின் மற்றும் ஹாய் போங் (வியட்நாம்), கின்ஷோ (சீனா), போர்ட் கிளாங் (மலேசியா) வழியாக மீண்டும் தூத்துக்குடியை வந்தடையும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.

ஏற்றுமதி வாய்ப்பு

சேவை அட்டவணையின்படி, இந்த கப்பல் தூத்துக்குடியில் இருந்து வியட்நாமின் 'ஹோ சி மின்' நகரை சென்றடைய சுமார் 7 நாட்களும், அந்நாட்டின் 'ஹாய் போங்' நகரை சென்றடைய சுமார் 10 நாட்களும் ஆகும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இயக்கப்பட உள்ள இந்த சேவை மூலம், இந்தியா, வியட்நாம், சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையே சீரான சரக்கு கப்பல் போக்குவரத்து இணைப்பு கிடைக்கும்.

அரிசி, தானியங்கள், உரம், பருத்தி, நூல், தென்னை நார் பொருட்கள், தேங்காய் நார்த்தூள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பிராந்திய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

X