

சென்னை,
அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை டிடிவி.தினகரன் தொடங்கினார். அக்கட்சியின் பொது செயலாளராக செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்பேன் என்று கூறி வந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன், அமமுக கூட்டணி வைத்து 11 தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் மன்னார்குடியில் மட்டும் அமமுக வென்றது. அந்த கட்சியின் எம்.எல்.ஏ.வாக காமராஜ் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய்யை புகழ்ந்து, அவருக்கு ஆதரவாக பேசினார். இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கி தினகரன் உத்தரவிட்டார். தினகரனின் செயல்பாடு பிடிக்காமல் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் அமமுகவில் இருந்து விலகி வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளராக இருந்த செந்தில் நாதன், கட்சி பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தும், அதிமுகவை மீட்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கட்சி ஆரம்பித்த தினகரன், மீண்டும் எடப்பாடியை ஆதரித்ததுடன் துரோகத்தின் வழியில் நடப்பதாக செந்தில் நாதன் குற்றம் சாட்டி உள்ளார்.
இதைபோல திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகர அமமுக செயலாளராக இருந்தலக்கி நாசரும், அக்கட்சியில் இருந்து விலகுவதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். அதேபோல் அமமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் யானை காலிதும் விலகுவதாக தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் அக்கட்சியினர் அமமுகவில் இருந்து கூண்டோடு விலக முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் விலகியுள்ளார். மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், கட்சியில் இருந்து விலகியுள்ளார். கட்சி ஆரம்பித்த நோக்கத்தை மறந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு துதி பாடும் உங்களது சுயநல போக்கால் விலகுகிறேன் என டிடிவி தினகரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் டிடிவி.தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.