மின்வாரிய அலுவலக ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறனர்.
மின்வாரிய அலுவலக ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
Published on

சென்னை,

தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகளைத் திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளும் மீட்கப்பட்டுள்ளன. ஒப்பந்த ஊழியரான கோபிநாத் கைது செய்யப்பட்டபின் கொடுத்த வாக்குமூலத்தின்படி பெங்களூருவைச் சேர்ந்த முரளி மனோகர் (32) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழக்கில் தொடர்புடைய 34 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் 20 ஜிபி ரேம் பாகங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

வழக்கின் முழுவிவரம்:-

கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் ரூ.397 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனிடையே வணிக நிறுவனங்கள் ரகசியமாக கூட்டு சேர்ந்து ஒப்பந்தப்புள்ளி விலையை செயற்கையாக உயர்த்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட மின்வாரிய ஒப்பந்தப்புள்ளி தொடர்பான நிதி பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளும் ஆய்வு செய்து வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த மாதம் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. மின்சாரத்துறையின் புதிய அமைச்சராக நிர்மல்குமார் நியமிக் கப்பட்டுள்ளார். அவர் பதவி ஏற்றவுடன், மின்துறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆய்வு நடத்தினார்.

அப்போது, கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின்சார வாரியத்தில் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி கடன் மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், ரூ.8 லட்சம் மதிப்பிலான மின்மாற்றிகள் அதிக விலைக்கு வாங்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அத்துடன் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

இந்தநிலையில், சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் தங்களது கம்ப்யூட்டர்களில் இருந்த முக்கிய திட்டக் கோப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் காணாமல் போனதை கவனித்தனர். அதையடுத்து கம்ப்யூட்டர்களில் இருந்த 34 ‘ஹார்டு டிஸ்க்கு கள் திருடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதன்படி, மின்சார வாரிய அதிகாரிகள், முதலில் மின்வாரியத்தில் உள்ள விழிப்புப்பணித்துறைக்கு புகார்கள் அனுப்பினர். அதன்படி, கூடுதல் டி.ஜி.பி. ஆயுஷ் மணி திவாரி தலைமையிலான விழிப்புப் பணித்துறையினர் விசாரணையை தொடங்கினர். 'ஹார்டு டிஸ்க்குகள்' திருட்டு தொடர்பாக சிந்தாதிரிபேட்டை போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். திருட்டு தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் டி.ஜெயச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

'ஹார்டு டிஸ்க்குகள்' திருட்டு தொடர்பாக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரை சிந்தாதிரிபேட்டை போலீசார் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். சிந்தாதிரிப்பேட்டை போலீசாருடன் சைபர் கிரைம் போலீசாரும் நடத்திய விசாரணையில், ஹார்டு டிஸ்க்குகளை திருடியது கம்ப்யூட்டர் பராமரிப்பு பணியை ஒப்பந்த முறையில் மேற்கொள்ளும் தனியார் நிறுவன ஊழியரான ராயப்பேட்டையை சேர்ந்த கோபிநாத் (வயது 41) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இன்னொரு ஒப்பந்த ஊழியரும் சிக்கினார்.

2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் லட்சக்கணக்கில் பணம் கை மாறி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து கைதானவர்கள் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து கைது செய்வதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே விசாரணையை பாதிக்கும் என்பதால், அவர்கள் அளித்த வாக்குமூலம் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

இதற்கிடையில், கைதான கோபிநாத்தை பெங்களூரு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிநாத்தை சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com