

சென்னை,
திருவள்ளூர் பெரியபாளையம் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் மீன், இறால் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் செயின்ட் பீட்டர் பால் என்ற தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 77 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதில் ஜூவான், மலோத்தி ஆகிய 2 பெண் தொழிலாளர்கள் அன்றைய தினமே உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் பகுதியில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகள், சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி, ஸ்டான்லி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நேற்று முன்தினம் 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட னர். உயிரிழந்த 7 பேர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளி ஏஞ்சூரா நாசூரின் (20) என்பவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்திருந்தது.
நேற்று பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் கூடுதலாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆகவே தற்போது மொத்தம் 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களின் நிலை குறித்த விவரங்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா தலைமையில் தீயணைப்பு துறை தலைமை உதவி இயக்குனர் சரவணகுமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய டி.இ. செல்வ இளவரசி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்களான சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மோகன் (59), ஜோசப் ஜெகன் (48), மேலாளர் டேனியல் (68) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்த 140 தொழிலாளர்களை வருவாய்த் துறையினர் மீட்டு பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் 18 வயதுக்கு குறைவான வடமாநில குழந்தை தொழிலாளர்கள் ஏராளமானோர் பணி அமர்த்தப்பட்டு பணியாற்றி வந்த திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளது.
பெரியபாளையம் தனியார் திருமண மண்டப முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த வடமாநில தொழிலாளர்களை ஒடிசா மாநில தொழிலாளர்கள் நலத்துறை அலுவலர் சவுமியா, தொழிலாளர்கள் நலத்துறை ஆணையர் ராஜேஷ் அகர்வால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நலத்துறை ஆலோசகர் பி.பி.ஆச்சாரி ஆகியோர் பார்வையிட்டனர்.
பல்வேறு மொழிகள் தெரிந்த 8 பெண்களை 4 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அடையாளம் காட்ட போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
தனியார் தொழிற்சாலையில் 500 முதல் 1,000 டன் வரை கடல் உணவு பொருட்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பிலுள்ள அனைத்து கடல் உணவு பொருட்களும் பதப்படுத்தப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்க இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. உயிரிழந்த 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு விமானம் மூலம் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் திருவள்ளூர் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒடிசாவை சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.