நெல்லை கல்குவாரியில் சிக்கிய மேலும் ஒருவர் பலி

நெல்லை கல்குவாரி பாறைகளுக்கு இடையே சிக்கிய மேலும் ஒருவர் பலியானார்.
நெல்லை கல்குவாரியில் சிக்கிய மேலும் ஒருவர் பலி
Published on

நெல்லை,

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி உள்ளது. இங்கு தினமும் வெடிபொருட்கள் மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டு கற்கள் அள்ளும் பணிகள் நடைபெறும்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இரவில் சுமார் 400 அடி ஆழம் கொண்ட இந்த கல்குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென ராட்சத பாறைகள் சரிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), தச்சநல்லூர் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35), இளையநயினார் குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியை சேர்ந்த விஜய் (27), ஆயன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 6 பேர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் விட்டிலாபுரம் முருகன், விஜய், செல்வம் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு செல்வம் பரிதாபமாக இறந்தார்.

இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை மீட்பதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 30 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நள்ளிரவில் கல்குவாரி பகுதிக்கு வந்து சேர்ந்தனர். கல்குவாரியில் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர்.

நேற்று காலையில் தமிழக அரசின் வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், கனிமம் மற்றும் சுரங்க இயக்குனர் நிர்மல்ராஜ், நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு முதற்கட்டமாக 3 வீரர்கள் கயிறு மூலம் கல்குவாரியில் இறங்கினார்கள். அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒருவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களுடன் தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் அடுத்தடுத்து பாறைகள் சரிந்து விழுந்தது. இதனால் மீட்பு குழுவினர் 2 மணி அளவில் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி விட்டு மேலே ஏறினார்கள். இதனால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கியவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டு உள்ளனர். அவர்கள் கதறி அழுதவாறு இடிபாடுகளில் சிக்கியவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com