கூடலூரில் வனத்துறையினர் வைத்த கூண்டில் மேலும் ஒரு புலி சிக்கியது... மக்கள் நிம்மதி..!

புலியின் உடல்நிலையை பரிசோதித்த வனத்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
புலி சிக்கியது
ஆட்கொல்லி புலி
Published on: 

நீலகிரி,

வனத்துறையினர் வைத்த கூண்டில் மற்றொரு புலி சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவரை செப்டம்பர் மாதம் 9-ந் தேதியும், ரவிச்சந்திரனை 21-ந் தேதியும் அடுத்தடுத்து புலி ஒன்று கடித்து கொன்றது. இந்த ஆட்கொல்லி புலியை பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து லாரஸ்டன், கெவிப்பாரா, பாரம், கோக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 70-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் களத்தில் இறங்கி புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இரவு, பகல் என எந்த நேரத்திலும் செயல்படக்கூடிய 3 அதிநவீன டிரோன்களை கொண்டு நிலப்பரப்பில் புலி எந்த இடத்தில் பதுங்கி உள்ளது என தேடும் பணியும் நடைபெற்று வந்தது. அக்டோபர் 18-ந்தேதி கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் 2 பேரை கொன்ற ஆட்கொல்லி புலி சிக்கியது. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. புலியை வாகனத்தில் ஏற்றி முதுமலை கார்குடிக்கு கொண்டு சென்றனர். பின்னர், முதுமலையிலிருந்து சென்னை வண்டலூர் மறுவாழ்வு காப்பகத்துக்கு மைசூரு வழியாக வனத்துறையினர் புலியை கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் மற்றொரு புலி உடலில் காயங்களுடன் சுற்றித்திரிவதை வனத்துறையினர் நோட்டமிட்டனர். பின்னர், அந்த புலியை பிடிக்க கூண்டு வைத்தனர். கோகால் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் இன்று அதிகாலை அந்த புலி சிக்கியது. அதன் உடல்நிலையை பரிசோதித்த வனத்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com