புதுக்கோட்டையில் 2 ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தர்மபுரி மாவட்ட ஊராட்சிகளுக்கு ரசீது புத்தகங்கள் வினியோகத்தில் ஒப்பந்ததாரர்கள் முறைகேடு தொடர்பாக புதுக்கோட்டையில் 2 ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டையில் 2 ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Published on

ரசீது புத்தகங்கள் வினியோகத்தில் முறைகேடு

தர்மபுரி மாவட்ட முன்னாள் கலெக்டரும், தற்போதைய சென்னை அறிவியல் நகரின் துணை தலைவராகவும் பணிபுரிந்து வருபவர் மலர்விழி. இவர் தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய காலத்தில் மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளுக்கு தமிழக அரசின் 5-வது மாநில நிதி குழு மானிய நிதியில் இருந்து சொத்துவரி ரசீது புத்தகங்கள், குடிநீர் கட்டணம் வசூல் ரசீது புத்தகங்கள், தொழில் வரி ரசீது புத்தகங்கள் மற்றும் இதர கட்டண புத்தகங்கள் ஆகியவை 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 எண்ணிக்கையில் 2 தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து வினியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகங்கள் ஒப்பந்த புள்ளிகள் கோரப்படாமல் அதிகபட்ச விலைக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மலர்விழி கொள்முதல் செய்துள்ளார். இதில் அவர் பணம் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி பவுடர் தெளித்தலிலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

இந்த முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி, தனியார் நிறுவன உரிமையாளர்களான புதுக்கோட்டையை சேர்ந்த தாகீர் உசேன், வீரய்யா பழனிவேல் ஆகியோர் மீது தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 3 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் வீரய்யா பழனிவேலின் வீடு புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தில் உள்ளது. அங்குள்ள அவரது 2 வீடுகளில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், ஜவகர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். இதேபோல புதுக்கோட்டை அசோக்நகர் அருகே உள்ள பொன்னகர் பகுதியில் தாகீர் உசேனின் வீடு உள்ளது. அங்கு திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேவியர்ராணி தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

ஒப்பந்ததாரர்கள்

புதுக்கோட்டையில் 3 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையானது மாலை வரை நீடித்தது. வீரய்யா பழனிவேல் ஒப்பந்ததாரர் ஆவார். இவர் எல்.இ.டி. விளக்குகள் அமைத்தல், கிருமி நாசினி பவுடர் வினியோகித்தல் உள்பட அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல தாகீர் உசேனும் ஒப்பந்ததாரர் ஆவார். வீரய்யா பழனிவேலின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

தாகீர் உசேனின் வீட்டில் சோதனையின் முடிவில் தெரிவிக்கப்படும் என்றனர். ஒப்பந்ததாரர் வீரய்யா பழனிவேலின் வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் அரசு ஒப்பந்த பணியில் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. வீரய்யா பழனிவேல் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் ஆவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com