

சென்னை
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. இந்நிலையில், நகராட்சித்துறையில் நடந்த 2 ஆயிரத்து 538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப்பணம் கைமாறியுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து கே.என்.நேரு. சென்னை ஐகோர்ட்டில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு என்னுடைய தரப்பின் கருத்துகளை இந்த ஐகோர்ட்டு கேட்கவில்லை. எனவே, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவை வாபஸ் பெற்று கொள்ளவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி திருச்சி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளில் சொதனை நடந்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 5-ந்தேதி கே.என்.நேருவின் வீடு உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்கள் சிக்கின. இதுதொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது என கூறப்படுகிறது. இந்த 2-வது கட்ட சோதனையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேரு சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.