அமைச்சர் பொன்முடிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு - ஜூலை 6-ந்தேதி தீர்ப்பு

அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் வரும் ஜூலை 6-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்துள்ளது.
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு - ஜூலை 6-ந்தேதி தீர்ப்பு
Published on

சென்னை,

கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அவரது மாமியார் பெயரில் பதிவு செய்ததாக பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, சார்பதிவாளர் புருபாபு, அப்போதைய எம்.எல்.ஏ. சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கக் கூடிய சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு விசாரணை காலத்தில் அமைச்சர் பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, புருபாபு, சைதை கிட்டு ஆகியோர் உயிரிழந்து விட்டனர்.

இதையடுத்து பொன்முடி உள்ளிட்ட மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த விசாரணைக்கு முன்னாள் கலெக்டர் ராஜரத்தினம் உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட சாட்சிகள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த வழக்கில் வரும் ஜூலை 6-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com