

சேலம்,
சேலம் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் விடிய, விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.32 லட்சம் வரை யு.பி.ஐ. பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த பணம் லஞ்சமாக பெறப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் சத்திரம் பகுதியில் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பல்வேறு பணிகளில் முறைகேடு நடப்ப தாக எழுந்த புகாரை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் பணியில் இருந்த அதிகாரிகள், அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. அலுவலகத்தின் கதவுகளும் பூட்டப்பட்டன.
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒவ்வொரு அறைக்கும் சென்று சோதனை செய்து ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது வருவாய் பிரிவில் பணிபுரிந்து வரும் உதவி வருவாய் அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள், வரி வசூலர், உதவியாளர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் சிக்கியது.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நேற்று காலை 10 மணி வரை நீடித்தது. சுமார் 18 மணி நேரம் நடந்த சோதனையில் சில அலுவலர்களின் செல்போன்களை வாங்கி பார்த் தபோது, யு.பி.ஐ. மூலம் ரூ.32 லட்சம் பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அனைத்து விவரங்களையும் போலீசார் சேகரித்துக் கொண்டனர். அந்த பணம் எதற்காக பரிமாற்றம் செய்யப்பட்டது? பல்வேறு பணிகளுக்காக லஞ்சமாக பெறப்பட்டதா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.