எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்தது.
எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Published on

அதிக விலை கொடுத்து கொள்முதல்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போது சந்தை விலையை காட்டிலும் அந்த எல்.இ.டி. பல்புகள் பல மடங்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிரடி சோதனை

இதையடுத்து சென்னையில் செயல்படும் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய தனியார் நிறுவனம் இந்த எல்.இ.டி. பல்புகளை சப்ளை செய்துள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த சமிக்ஸா ஏஜென்ஸி நிறுவனத்தின் உரிமையாளர் திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சுதாகர் என்பது தெரியவந்தது.

இவரது வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமை யிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் மேலரண் சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீகணேசா டிரேடர்ஸ் எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் ஹார்டுவேர் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 25 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னைக்கு விற்பனை

இந்த தனியார் நிறுவனம் தயாரிக்கும் பல்புகள் சென்னை பகுதிக்கு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினார்கள். மாலை 4 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. பின்னர் அந்த குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதைத்தவிர கோவை, சென்னை, செங்கல்பட்டு என தமிழகம் முழுவதும் மொத்தம் 26 இடங்களில் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com