லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு: “சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசைதிருப்பவே ரெய்டு” - கே.என்.நேரு

கடந்த கால ரெய்டுகளை போலவே அனைத்தையும் எதிர்கொள்வோம் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு: “சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசைதிருப்பவே ரெய்டு” - கே.என்.நேரு
Published on: 

சென்னை,

கே.என்.நேருவின் வீட்டில் காலை 7 மணிக்கு தொடங்கியநிலையில் 8 மணி நேரத்திற்கு பின் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.

மனு தள்ளுபடி

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. இந்நிலையில், நகராட்சித்துறையில் நடந்த 2 ஆயிரத்து 538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப்பணம் கைமாறியுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து கே.என்.நேரு. சென்னை ஐகோர்ட்டில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு என்னுடைய தரப்பின் கருத்துகளை இந்த ஐகோர்ட்டு கேட்கவில்லை. எனவே, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவை வாபஸ் பெற்று கொள்ளவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இதனையடுத்து, ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதன்படி திருச்சி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளில் சொதனை நடைபெற்றது. 25 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

கடந்த செப்டம்பர் 5-ந்தேதி கே.என்.நேருவின் வீடு உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்கள் சிக்கின. இதுதொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

8 மணி நேரம்

இந்நிலையில் திருச்சியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் காலை 7 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடங்கியநிலையில், தற்போது 8 மணி நேரத்திற்கு பின் நிறைவடைந்துள்ளது.

முன்னதாக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் சுமார் 6 மணிநேரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்தநிலையில், அங்கிருந்த முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்து சென்றனர்.

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசைதிருப்பவே ரெய்டு

லஞ்ச ஒழிப்பு சோதனை தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கே.என்.நேரு, “சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசைதிருப்பவே ரெய்டு. இன்றைய சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. அதிகாரிகள் என்னிடம் எதையும் விசாரிக்கவில்லை. எடுத்த பொருட்களுக்கு கையொப்பம் பெற்றனர்.

திருச்சி இடைத்தேர்தலில் நான் இல்லாமலும் திமுகவினர் பணியாற்றுவர். கடந்த கால ரெய்டுகளை போலவே அனைத்தையும் எதிர்கொள்வோம்” என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com