

சென்னை,
சென்னை ரெயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்து திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினர் கடந்த 11ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருமுருகன் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "மே17 இயக்கத்தின் மூத்தத் தோழர் சிவா திலீபன் எனும் தோழர் சிவக்குமார் பற்ற வைத்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பரவும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த போராட்டத்தின்போது, ரெயில் நிலையத்தில் இருந்த இந்தி பெயர் எழுத்துகளை அழித்தனர். ரெயில்வே காவலர்கள் தடுக்க முயன்றதையும் கடந்து முழக்கமிட்டு சென்றார்கள். சென்னை பார்க் ரெயில் நிலையத்தில் உள்ள பெரும்பாலான இந்தியை இணைந்து சிவக்குமார் அழித்தார். முழக்கமிட்டவாறே பயணிகளுக்கு துண்டறிக்கை விநியோகம் செய்தார்.
இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது, 'இந்தி ஒழிக, தமிழ் வாழ்க' என முழக்கமிட்டு ரெயில் முன் சிவா திலீபன் பாய்ந்தார். இதில் படுகாயமுற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மே17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.