கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்: மேயர் பிரியா அறிவுறுத்தல்

கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் 3,319 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்: மேயர் பிரியா அறிவுறுத்தல்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு, தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்துதல் மற்றும் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகள் வழங்குதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது:-

கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் 3,319 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள உபயோகமற்ற பொருட்களை அகற்றிட வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2022-ம் ஆண்டு 7 ஆயிரத்து 199 மாடுகளும், கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 237 மாடுகளும், நடப்பு ஆண்டில் 122 மாடுகளும் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, இனக்கட்டுப்பாட்டு மையங்களில் 2022-ம் ஆண்டு 16 ஆயிரத்து 705 நாய்களுக்கும், கடந்த ஆண்டு 14 ஆயிரத்து 533 நாய்களுக்கும் மற்றும் நடப்பு ஆண்டு 797 நாய்களுக்கும் இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சுகாதார அலுவலர்கள் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com