கோவில் சொத்தை பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் சொத்தை பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சேலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து, ஜெயசந்திரன் என்பவர் தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். இதற்கு உடந்தையாக இருந்ததாக சேலம் சார் பதிவாளர் செந்தாமரை உள்ளிட்டோர் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படி சென்னை ஐகோர்ட்டில் செந்தாமரை தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. கோவில் சொத்து தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்தது பற்றியோ, பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது பற்றியோ தனக்கு எதுவும் தெரியாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், கோவில் சொத்துகள் தொடர்பான தடை இருப்பது பற்றி மனுதாரருக்கு நன்கு தெரியும். வேண்டுமென்றே தனது உறவினருக்கு இந்த சொத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதித்துள்ளதால் முன் ஜாமீன் வழங்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வேண்டும் என்றே பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கி உள்ளதாகக் கூறி, சார் பதிவாளரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com