பழங்கால பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சிவகளை அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
பழங்கால பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
Published on

தூத்துக்குடி,

தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி. ஆகியோர் நேற்று தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை சிவகளையில் நடைபெறும் அகழாய்வு உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.

இங்கு பழங்கால மக்களின் வாழ்விடங்கள், ஈமச்சடங்கு நடைபெற்ற இடங்கள் போன்றவை கண்டறியப்பட்டு உள்ளன. இங்கு கருப்பு, சிவப்பு நிற மண்பாண்டங்கள், வெள்ளை நிற பானைகள், கிண்ணங்கள், செப்புக்காசுகள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள், இரும்பிலான பொருட்கள், சுடுமண் சிற்பங்கள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன.

மத்திய அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையில், அங்கு வசித்த பழங்கால தமிழர்களின் நாகரிகம் கி.மு. 650 முதல் கி.மு. 750-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சிவகளையில் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம், ஆதிச்சநல்லூரை விடவும் தொன்மை வாய்ந்ததாக இருக்கலாம். அந்த காலகட்டத்தை கண்டறியும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு கிடைக்கப்பெற்றுள்ள பொருட்களில் நெல்மணிகள் மிக முக்கியமானதாகும். இங்கே கிடைத்துள்ள மண்டை ஓடு, எலும்புகள் உள்ளிட்ட பொருட்கள் ஆய்வுக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இரும்பு காலம் என்று சொல்லக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் இங்கு இருந்திருக்கக்கூடும்.

சிவகளை தாமிரபரணி ஆற்றின் ஒரு அடையாள சின்னம். இங்கு ஓரிடத்தில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. ஆய்வு முடிவுகள் வெளிவந்தவுடன் தமிழ்நாட்டில் சிவகளை ஒரு முக்கிய இடமாக இருக்கும். தமிழக அரசு சிவகளையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும்.

இங்கு அகழாய்வில் கிடைத்த பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்து கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com