தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த சமூக விரோத செயல் கண்டிக்கத்தக்கது: விஜயகாந்த் அறிக்கை

தேமுதிக தலைமை கழகத்தில் தேமுதிக சார்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தேமுதிக தலைமை கழகத்தில் தேமுதிக சார்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்வதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது, "ஆண்டுதோறும் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தணிப்பதற்காக தேமுதிக தலைமை கழகத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கடந்த மாதம் 14ஆம் தேதி தேமுதிக தலைமை கழகத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு நாள்தோறும் மோர், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு , சுத்திகரிக்கப்பட்ட குளிர்ந்த நீர் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற தேமுதிகவின் கொள்கைப்படி அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டதை பொறுத்து கொள்ள முடியாத சமூக விரோதிகள் சிலர் இதுபோன்ற தரமற்ற செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேமுதிக தலைமை கழகத்திலேயே இதுபோன்ற சம்பவம் அரங்கேறிய நிலையில் சாமானிய மக்களுக்கு உரிய பாதுகாப்பு எவ்வாறு கிடைக்கும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகிறது. தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறா வண்ணம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மூன்றாவது கண் என அழைக்கப்படும் சிசிடிவி கேமராக்களை அனைத்து இடங்களிலும் பொருத்தி காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். மக்களின் தாகத்தை தணித்த தண்ணீர் பந்தலுக்கு தீயவர்கள் தீ வைத்த சம்பவம் நல்லதுக்கு காலம் இல்லையோ என நினைக்க தோன்றுகிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com