தமிழர் மரபையும், பண்பாட்டு அடையாளத்தையும் சிதைக்கும், எந்த முயற்சியையும் ஏற்க முடியாது - வேல்முருகன் கண்டனம்

கலை படைப்புகளுக்கு படைப்புச் சுதந்திரம் உண்டு.
வேல்முருகன்
Published on

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இயக்குநர் திரிவிக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள "Born in the North. Forged in the Heartland. Worshipped in the South." என்ற வாசகம் தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழர் பண்பாட்டு மரபிலும், சங்க இலக்கியங்களிலும், முருகப்பெருமான் குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகவும், தமிழரின் வாழ்வியல், மொழி, பண்பாடு ஆகியவற்றோடு ஒன்றிணைந்த தெய்வமாகவும் போற்றப்படுகிறார். இந்த வாசகங்கள் முருகப்பெருமானைக் குறிப்பதாக இருந்தால், அது தமிழர் மரபையும் வரலாற்றுப் பார்வையையும் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

தமிழர் மரபு

கலை படைப்புகளுக்கு படைப்புச் சுதந்திரம் உண்டு. ஆனால், அந்த சுதந்திரம் ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, மத உணர்வுகள் மற்றும் அடையாளங்களை மாற்றியமைக்கும் உரிமையாக மாறக்கூடாது. குறிப்பாக, பல்வேறு மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ள பொருளில், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான விளம்பர வாசகங்களைத் தவிர்க்க வேண்டும். எனவே, இந்த வாசகங்கள் முருகப்பெருமானைக் குறிப்பதா? இல்லையா? என்பதை திரைப்படக் குழுவினர் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். முருகப்பெருமானை குறிப்பதாக இருந்தால், தமிழர் மரபுக்கு முரணாகப் புரிந்துகொள்ளப்படும் இந்த வாசகத்தைத் திரும்பப் பெற்று, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உரிய விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும், வரலாற்று மரபும் யாராலும் மாற்றி எழுதப்பட முடியாது. அவற்றை மதிப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்பதை திரைப்படக் குழுவினருக்கு வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com