திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விவகாரம்: பாதிக்கப்பட்ட 17 குடும்பத்தினருக்கு புதிய வீடு

திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததால் வீடுகளை இழந்த 17 குடும்பத்தினருக்கு புதிய வீட்டுக்கான ஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விவகாரம்: பாதிக்கப்பட்ட 17 குடும்பத்தினருக்கு புதிய வீடு
Published on

சென்னை,

சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே வெளியேறியதால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த 28 குடும்பத்தினருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்பில் வீடு ஒதுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மாற்று வீடுகள் ஒதுக்கீடு

மேலும், வீடுகளை இழந்த 28 குடும்பத்தினருக்கும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அதன்படி, அன்றைய தினமே இந்த நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் வீடுகளை இழந்த 28 குடும்பங்களில் 17 குடும்பங்கள் மாற்று வீடுகள் பெற ஒப்புக்கொண்டனர். இவர்களில் 9 குடும்பங்களுக்கு ஆல் இந்தியா ரேடியோ எர்ணாவூர் திட்ட பகுதியிலும், 8 குடும்பங்களுக்கு என்.டி.ஓ. குப்பம் திட்ட பகுதியிலும் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டன.

அமைச்சர் வழங்கினார்

இதற்கான ஆணையை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதிக்கப்பட்டுள்ள 28 குடும்பங்களில் 17 குடும்பங்கள் புதிய வீட்டுக்கான ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மீதமுள்ள 11 குடும்பங்கள் அதே இடத்தில் பழைய குடியிருப்பை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக கட்டப்படவுள்ள குடியிருப்பில் வீடுகள் வழங்க வேண்டும் என்று கோரி உள்ளனர். அதே பகுதியில் புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டதும் அவர்களுக்கு வீடு ஒதுக்கப்படும்.

கருணைத்தொகை

மறு கட்டுமானம் மேற்கொள்ளப்படும்வரை அவர்கள் வெளியில் வாடகைக்கு குடியிருக்க கருணைத்தொகையாக ரூ.24 ஆயிரம் வழங்கப்படும்.

அதே பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்துவரும் 308 பேர் வீடுகளை காலி செய்து கொடுத்தால் அவர்களுக்கு அப்பகுதியிலேயே நல்ல தரத்துடன் புதிய வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், கே.பி.சங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் ம.கோவிந்தராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com