கள்ளக்குறிச்சி வழக்கு குறித்த சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதா? - அன்புமணி கண்டனம்

தமிழக அரசின் மேல்முறையீட்டில் மக்களுக்குதான் நீதி கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி வழக்கு குறித்த சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதா? - அன்புமணி கண்டனம்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. கள்ளச்சாராய சாவு வழக்கில் உண்மைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு விஷ சாராய சாவு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த நவம்பர் 20-ம் தேதி தீர்ப்பளித்தது. அடுத்த இரு வாரங்களில் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தது. ஆனால், வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்காத தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி வழக்கு விவகாரத்தில் திமுக அரசு எந்தத் தவறும் செய்யவில்லை; சட்டப்படிதான் செயல்பட்டது என்றால் வழக்கை சிபிசியிடம் ஒப்படைப்பதில் எந்தத் தயக்கமும் இருக்கத் தேவையில்லை. மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் தேவையில்லை. ஆனால், இந்த வழக்கில் அவசர அவரசமாக மேல்முறையீடு செய்திருப்பதன் மூலம், கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியது, அதற்கு மறைமுகமாக ஆதரவளித்தது உள்ளிட்ட உண்மைகள் வெளிவந்து விடுமோ? என்று திமுக அரசு அஞ்சுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

சிபிஐ விசாரணை நடத்தப்பட்டால் உண்மைகள் அனைத்தும் வெளிவந்து விடும் என்ற அச்சம்தான் மேல்முறையீட்டுக்கு காரணம் ஆகும். சில தவறுகளை சில காலம் மறைக்கலாம்; பல குற்றங்களை பல காலம் மறைக்கலாம்; ஆனால், எல்லா தவறுகளையும், குற்றங்களையும் எல்லா காலத்திற்கும் மறைக்க முடியாது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தாலும் கூட, அதிலும் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். சற்று தாமதமாகவேனும் கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவுகள் தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும். இது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com