பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட கல்வி அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருந்த கல்வி அதிகாரிகள், மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட கல்வி அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்
Published on

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருந்த கல்வி அதிகாரிகள், மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.

அவமதிப்பு வழக்கு

தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்ளின்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பி.ஏ. ஆங்கில பிரிவில் பட்டப்படிப்பை கடந்த 2008-ம் ஆண்டில் முடித்தேன். பின்னர் 2012-ம் ஆண்டில் பி.எட் படிப்பை முடித்துவிட்டு, நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் கிரேடு-2 ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றும் உள்ளேன். பதவி உயர்வு பெற எனக்கு தகுதி இருந்தும், தவிர்த்து வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டில், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

அதை விசாரித்த ஐகோர்ட்டு, எனது மனுவை 8 வாரத்தில் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை எனது பதவி உயர்வுக்கான மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பிடிவாரண்டு

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதையடுத்து அவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

அதிகாரிகள் நேரில் ஆஜர்

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி, மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜராகி, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கல்வி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com