

சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்ததாவது:-
2026-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தங்கள் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களும் ஜூலை 10-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
தேர்வு பட்டியல்
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்களை தேர்வுசெய்து தேர்வு பட்டியலை ஜூலை 14 முதல் 21-ம் தேதிக்குள் ஆன்லைனில் அனுப்ப வேண்டும்.
மாவட்ட தேர்வுக்குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரி தலைவராகவும், மாநில பிரதிநிதியாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வரும், மாவட்ட ஆட்சியரின் பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரும் இடம்பெறுவர்.
உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எவ்விதமான புகாருக்கும் இடமில்லாமல் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.