

சென்னை,
2026-ம் ஆண்டுக்கான வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தை வழிநடத்த மாநில எல்லைகளைக் கடந்து சென்ற தந்தை பெரியாரைப் போற்றும் வகையில், சமூக நீதி நாளான செப்டம்பர் 17 அன்று, தமிழ்நாட்டிற்கு வெளியே (இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ) வசிக்கும், விளிம்புநிலை மக்களின் நலனுக்காக அயராது உழைத்து குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சரால் ஆண்டுதோறும் 'வைக்கம் விருது' வழங்கப்படுகிறது.
இவ்விருதை பெறுபவருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான காசோலை, சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டிற்கு வெளியே வசிப்பவர்கள் மட்டுமே இவ்விருதைப் பெற தகுதியுடையவர்கள்.
2026-ஆம் ஆண்டிற்கான வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விரிவான சுயவிவரக் குறிப்பு (bio-data), தொடர்புடைய விவரங்கள் மற்றும் துணை ஆவணங்களுடன், "அரசுச் செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600009" என்ற முகவரிக்கு அல்லது publicgeneral1@tn.gov.in / vaikomaward.tamilnadu@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு 12.09.2026 அன்று அல்லது அதற்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும். இவ்விருது பெறுநர்கள் தமிழ்நாடு அரசால் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்களுக்கான தகுதி வரம்புகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு:-
* தமிழ்நாட்டிற்கு வெளியே வசிப்பவர்கள் மட்டுமே இவ்விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர் ஒரு தனிநபராகவோ அல்லது ஒரு நிறுவனமாகவோ இருக்கலாம்.
* விண்ணப்பதாரர் ஒரு நிறுவனம் அல்லது அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தால், அது சம்பந்தப்பட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலோ அல்லது பிற மாநிலங்களிலோ உள்ள விளிம்புநிலை மக்களின் நலனுக்காகப் பணியாற்றியிருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக, பொது ஆவண எழுத்தர் (Notary Public) முன்னிலையில் உறுதிமொழிப் பத்திரம் (affidavit) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
* விளிம்புநிலை மக்களின் நலனுக்காகப் பணியாற்றிய பகுதியின் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை விண்ணப்பதாரர் இணைக்க வேண்டும் (பொருந்தும் பட்சத்தில்).”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.