விளம்பரப் பலகைகள் அமைக்க இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி

விதிமீறல்களை சரிசெய்யவும் கால அவகாசம் வழங்கப்படுகின்றது.
 விளம்பரப் பலகைகள் அமைக்க இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைக்க மாநகராட்சியின் இணையதளம் வாயிலாக ஆணையர் அவர்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விளம்பரப் பலகைகள் அமைக்க விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும், ஏற்கனவே உரிமம் பெற்று நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அமைத்ததில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யவும் 06.03.2026 வரை கால அவகாசம் வழங்கப்படுகின்றது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023ன் கீழ் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான விதிகள், அரசாணை எண்.45, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் நாள்: 12.04.2023 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி, விளம்பரப் பலகை அமைக்க விரும்புவோர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் (https://erp.chennaicorporation.gov.in/portal/login.jsp) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒற்றைச் சாளரக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து விதிமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டு, உரிய கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் உரிமம் வழங்கப்படும்.

விதிமுறைகள் பின்வருமாறு:

1. விளம்பரப் பலகைகள் நிலையான வகையில், நெகிழ்வு காகிதம் அங்கீகரிக்கப்பட்ட பிற பொருட்களில் அச்சிடப்பட்டதாக இருக்க வேண்டும்.

2. அச்சிடப்பட்ட திரைகள் சுழற்சி முறையில் காண்பிக்கப்படும் போது, ஒவ்வொரு காட்சிக்கும் குறைந்தது 10 விநாடிகள் மிகாமல் இருக்க வேண்டும்.

3. அனிமேஷன் அல்லது முழுமையான வீடியோ காட்சிகள், வாகன போக்குவரத்து இல்லாத பகுதிகள் அல்லது வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

4. பலதரப்பட்ட செய்திகள், நகராட்சிகளின் எல்லைகளில் மற்றும் மாநில/மத்திய சாலைகளில் முதன்மையான பகுதியில் குறிப்பிடப்பட்ட இடங்களைத் தவிர பிற இடங்களில் ஆணையர் அனுமதி பெற்று வழங்கலாம்.

5. விதி எண்-322ல் குறிப்பிடப்பட்டபடி, தரைமட்டத்திலிருந்து அளக்கும் போது விளம்பரப் பலகையின் அதிகபட்ச உயரம் 10 மீட்டரை மீறக்கூடாது. மேலும், இத்தகைய பலகைகள் இரண்டாம் மாடி வரை மட்டுமே அமைக்க அனுமதிக்கப்படும். அமைக்கப்படும் அனைத்து விளம்பரப் பலகைகளும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் இன்றி அமைக்கப்பட்ட பலகைகள் அனுமதியற்ற பலகைகளாக கருதப்பட்டு அவை அகற்றப்படும்.

மேலும், உரிமம் பெற்ற பின்னரும் விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட பலகைகள் அனுமதியற்றதாக கருதப்பட்டு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியற்ற பலகைகளுக்கு ரூ.25,000/- அபராதம் விதிக்கப்படும்.

உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும், ஏற்கனவே உரிமம் பெற்று நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அமைத்ததில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யவும் 06.03.2026 வரை கால அவகாசம் வழங்கப்படுகின்றது.

07.03.2026 முதல் உரிய உரிமம் இல்லாத அனைத்து விளம்பரப் பலகைகளும் அங்கீகரிக்கப்படாததாகக் கருதப்பட்டு, அகற்றுவதற்கு கடுமையான நடவடிக்கை

எடுக்கப்படும். மேலும், அதற்கான செலவு கட்டட உரிமையாளரிடமிருந்து / விளம்பரப் பலகை அமைத்தவரிடம் இருந்து வசூலிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com