முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
Published on

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று "முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது " வழங்கப்பட்டு வருகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கம் உள்ளடக்கியதாக இருக்கும். அதன்படி 2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வரும் ஆகஸ்டு 15-ந்ததி அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. எனவே இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்காணும் இந்த விருதுக்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையத்தளமான www.sdat.tn.gov.in, http://www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதிகள்

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பிக்க தகுதிகள் வருமாறு,

1. 15 வயது முதல் 35 வயதுடைய ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2022 அன்று 15 வயது நிரம்பியவராகவும் மற்றும் 31.03.2023 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

2. கடந்த நிதியாண்டில் (2022-2023) அதாவது 01.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

3. குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்)

4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.

5. மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கக் கடைசிநாள் வரும் 31-ந்தேதி அன்று மாலை 4.00 மணி ஆகும். மேற்கண்ட விருது தொடர்பாக இதர விபரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com