

பெங்களூரு:
நாட்டில் தேசப்பற்று
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள், 4 ஆயிரம் பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக பணி பெற்றுள்ளனர் என்று கூறினார். இதற்கு பா.ஜனதா அவர் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது. இந்த நிலையில் குமாரசாமிக்கு பதிலளிக்கும் விதமாக கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் சிவமொக்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை குமாரசாமி கூறியுள்ளார். ஏனென்றால் அவருக்கு அந்த அமைப்பின் கொள்கைகள் என்ன என்பது தெரியாது. நாட்டில் தேசப்பற்றை ஆர்.எஸ்.எஸ். வளர்க்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் பங்களிப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
அதிக நன்மை செய்வார்கள்
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சளாக தான் தெரியும். குமாரசாமி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு வந்து அதன் செயல்பாடுகளை கற்றால் நன்றாக இருக்கும். குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, சாதி அடிப்படையில் தான் அனைத்து நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டன. அவர் குடும்ப அரசியலை பின்பற்றி தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தான் அதிகாரத்தை வழங்கினார். இத்தகையவரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?.
சங்பரிவார் மூலம் கல்வி பெற்றவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வந்தால், நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஏனென்றால் அவர்கள் நாட்டிற்கு அதிகளவில் நன்மை செய்வார்கள். சங்பரிவார் மூலம் கல்வி பெற்றவர்கள் அரசு பதவி வகிக்கக்கூடாது என்று எப்படி கூற முடியும். நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேவகர்களாக இருந்தவர்கள் தான்.
நல்லது நடக்கும்
அந்த அமைப்பின் அலுவலகத்தில் கலாசாரம் குறித்து கற்பிக்கப்படுகிறது. அதனால் குமாரசாமி அந்த அலுவலகத்திற்கு வந்து அதன் கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுக்கிறேன். இதனால் அவருக்கு நல்லது நடக்கும்.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.