சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

புதிய நீதிபதிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து
Published on: 

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் உள்ள 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து 66 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 9 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வந்த டி.லிங்கேஸ்வரன்,

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்த பி.கார்த்திகேயன் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் விரைவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட கூடுதல் நீதிபதிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

சென்னை ஐகோர்ட்டிற்கு கூடுதல் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையின் மிக உயர்ந்த மரபையும், கண்ணியத்தையும் கொண்ட சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ள தங்களின் பணி சிறக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com