

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 51 நீதிபதிகள் உள்ளனர். 24 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள் என்று 19 பேருடைய பெயரை சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் ஏற்றுக் கொண்டது. அந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரை பரிசீலித்த மத்திய அரசு, 15 பேரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இந்திய ஜனாதிபதியால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் மாண்பமை சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவீக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், பி. முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, என்.குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.