அர்ச்சகர்கள் நியமனம்: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு முத்தரசன் வரவேற்பு

இந்துசமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர்கள் தான் அர்ச்சகர் உள்ளிட்ட கோயில் பணியாளர்களை நியமனம் செய்ய அதிகாரம் பெற்றவர்கள் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அர்ச்சகர்கள் நியமனம்: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு முத்தரசன் வரவேற்பு
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆலயங்களில் பணிபுரியும் அர்ச்சகர் பணியில் அனைத்துச் சாதியினரும் நியமிக்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை கலைஞர் அரசு ஏற்று, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றியது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற ஆகம பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் பல்வேறு சாதிப் பிரிவுகளை சேர்ந்த இரு நூறுக்கும் மேற்பட்டோர் ஆகம பயிற்சி பெற்று, தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் சட்டத்தை எதிர்த்து சிவாச்சாரியார்களும், வேறு சிலரும் உச்ச நீதிமன்றம் வரை வழக்காடினார்கள். இறுதியாக அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வழிவகை செய்யும் தமிழ்நாடு அரசு சட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது. இதன்படி அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டர்கள் போன்ற பணி நியமனத்திற்கான விதிமுறைகள் 2020. இந்தப் பணிவிதிகளை எதிர்த்து அறங்காவலர்கள் தான் அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டும், ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அர்ச்சகராகும் தகுதி படைத்தவர்கள் என சிவாச்சாரியர்கள் மீண்டும் உயர் நீதிமன்றம் வரை வழக்காடினர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மன்றம் " அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டர்கள் போன்ற கோயில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு 2020 ஆம் ஆண்டு உருவாக்கிய விதிகள் செல்லும் என்றும், இந்துசமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர்கள் தான் அர்ச்சகர் உள்ளிட்ட கோயில் பணியாளர்களை நியமனம் செய்ய அதிகாரம் பெற்றவர்கள் என்று உத்தரவிட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமவாய்ப்பு வழங்கும் திசையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதியை உறுதிப்படுத்தும் என்பதால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com