சென்னையில் பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள பணிகளை ஒருங்கிணைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னையில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பேரிடர் காலங்களில் நிவாரண பணிகள் போன்ற அவசரகால பணிகளை மேற்கொள்ளவும் 7 அமைச்சர்கள் மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

முன்னதாக வெளியிடப்பட்ட அரசாணையில் அமைச்சர்கள் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது முதல்-அமைச்சரின் ஆணையின்படி, மேற்கண்ட மாவட்ட பணிகளோடு கூடுதலாக அமைச்சர் பெருமக்களில் சிலருக்கு சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அவசரகால பணிகளை மேற்கொள்ள...

அதன் பேரில் மண்டல வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும் மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரண பணிகள் போன்ற அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், அமைச்சர்கள் மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்களாக பின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.

மண்டலம் 1 (திருவொற்றியூர்), மண்டலம் 2 (மணலி) - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் ரமேஷ்

மண்டலம் 3 (மாதவரம்), மண்டலம் 4 (தண்டையார்பேட்டை) - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன்

மண்டலம் 5 (ராயபுரம்), மண்டலம் 6 (திரு.விகநகர்) - மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ்

மண்டலம் 7 (அம்பத்தூர்), மண்டலம் 8 (அண்ணாநகர்), மண்டலம் 9 (தேனாம்பேட்டை) - கைத்தறி துணி நூல் மற்றும் காதித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி

மண்டலம் 10 (கோடம்பாக்கம்), மண்டலம் 11 (வளசரவாக்கம்) - இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு

மண்டலம் 12 (ஆலந்தூர்), மண்டலம் 13 (அடையார்) - போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்

மண்டலம் 14 (பெருங்குடி), மண்டலம் 15 (சோழிங்கநல்லூர்) - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ்

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள பணிகளை ஒருங்கிணைப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com