நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசு தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை உருவாக்கிடும் வகையில், நெடுஞ்சாலைத் துறை வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், மேம்பாடு செய்தல், புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல் ஆகிய பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் 414 இளநிலை வரைதொழில் அலுவலர்கள், 33 உதவிப் பொறியாளர்கள், 66 இளநிலை உதவியாளர்கள், 48 தட்டச்சர்கள், 6 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3, 4 தணிக்கை உதவியாளர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திலும், 45 இளநிலை உதவியாளர்கள், 3 உதவி வரைவாளர்கள், 9 தட்டச்சர்கள், 27 பதிவுரு எழுத்தர்கள் மற்றும் 24 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் கருணை அடிப்படையிலும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக குரூப்-2 ஏ பணிக்கான நெடுஞ்சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 180 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் மரு. ஆர். செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் இரா.செல்வதுரை, சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) ஆர். சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com