விமர்சனங்களை ஏற்று சரி செய்யும் அணுகுமுறை: அரசின் முடிவுக்கு சிபிஎம் வரவேற்பு

முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது
விமர்சனங்களை ஏற்று சரி செய்யும் அணுகுமுறை: அரசின் முடிவுக்கு சிபிஎம் வரவேற்பு
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு பணி அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். இவர் பிரபல ஜோதிடராவார். மேலும் த.வெ.க. கட்சியில் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். இதற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வெளியிட்டிருந்தார்.

விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராக இருந்தவருக்கு அரசு பதவியா? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். ஜோதிடர் எப்படி அரசியல் ஆலோசனைகள் வழங்குவார் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டசபையின் இன்றைய நிகழ்விலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. விசிக, தேமுதிக, மஜக கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. ஆதரவு மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 24 மணி நேரத்துக்குள் நியமன உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வரவேற்பு தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்தும், தவறை உணர்ந்தும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் பணிநியமனத்தை அரசு திரும்பப் பெற்றுள்ளது. விமர்சனங்கள், குறைகள் சுட்டிக்காட்டப்படும் போது அதை ஏற்றுச் சரிசெய்துகொள்வது என்ற அணுகுமுறை தொடர வேண்டும். அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com