

ஓசூர்,
காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், காதல் ஜோடிகள் தங்கள் இணையருக்கு பரிசு பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பரிசு பொருட்கள் எத்தனை விலை மதிப்புடையதாக இருந்தாலும், காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருவது ரோஜா தான். இதன் காரணமாக காதலர் தினத்தையொட்டி ரோஜா மலர்களின் விற்பனையும் அதிகரிக்கிறது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரோஜா மலர்களின் ஏற்றுமதி தற்போது அதிகரித்துள்ளது. ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மண்வளம் மற்றும் தட்பவெப்பம் நிலவுவதால், அங்கு ஏற்றுமதி தரம் வாய்ந்த ரோஜா மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் காதலர் தினம் நெருங்கி வருவதால், ரோஜா மலர்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதுடன், சிவப்பு ரோஜா மலர் ஒன்று 22 ரூபாய் வரையிலும், மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட ரோஜாக்கள் 15 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.