நெல்மூட்டைகளை சேமிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: ஜிகே வாசன்

நெல்மூட்டைகள் அனைத்தையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்ட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழக அரசு – நெல் கொள்முதல் நிலையங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க, உடனுக்குடன் நெல்மூட்டைகளை சேமிக்க மற்றும் இடம், சாக்கு, தார்பாய் ஆகியவை தேவைக்கேற்ப இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
தமிழக அரசு – டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களை முறையாக தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நெல்கொள்முதல் நிலையங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டமானது இன்னும் தீர்ந்தபாடில்லை.
காரணம் மழைக்காலம், வெயில்காலம் என எக்காலத்திலும் விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்மூட்டைகளை உடனுக்குடன் வாங்குவதில்லை, சேமிப்பதில்லை, போதிய தார்ப்பாய், இடம், சணல் தேவையான அளவில் இல்லை. இது தொடர்கிறது. இதனால் விவசாயிகள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற போது போதிய இட வசதி இல்லாத காரணத்தால் உடனுக்குடன் கொள்முதல் செய்யவில்லை.
மேலும் ஏற்கனவே கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை கிடங்குக்கும் உடனுக்குடன் கொண்டு செல்லவில்லை. இதனால் கொள்முதல் செய்த நெல்மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணாகிவிட்டது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் நெல்மூட்டைகள் மழைநீரால் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது மாதிரியான செய்திகளை தொடர்ந்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அனைவரும் பார்க்கிறோம். ஆனால் இப்பிரச்சனைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பயனளிக்கவில்லை. காரணம் தமிழக அரசின் நடவடிக்கைகளும் இத்துறை சார்ந்த அதிகாரிகளின் நடவடிக்கைகளும் முறையாக அமையவில்லை.
தமிழக அரசு நெல்கொள்முதல் நிலையங்களை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். நாள்தோறும் சுமார் 500 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதை அதிகரித்து, கொண்டுவரப்படும் நெல்மூட்டைகள் அனைத்தையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும். தேவையான அளவில் இட வசதி, சணல், தார்ப்பாய் ஆகியவை இருக்க வேண்டும். நெல்கொள்முதல் நிலையங்களில் தரை வாடகை என தேவையில்லாமல் வசூலிக்கப்படும் தொகையை வசூலிக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் கடன் வாங்கி, உடைமைகளை அடமானம் வைத்து, கடினமாக உழைத்து பயிரிட்டு, அறுவடை செய்த பிறகு நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணானால் அவர்களின் மனம் எவ்வளவு வேதனைக்குள்ளாகும். எவ்வளவு நஷ்டம் ஏற்படும். இதனையெல்லாம் தமிழக அரசு எக்கோணத்தில் பார்க்கிறது என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே தமிழக அரசு – நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவரும் நெல்மூட்டைகளை பிரச்சனைக்கு இடம் இல்லாத வகையில் கொள்முதல் செய்து அவர்களுக்கு உரிய விலையை உடனுக்குடன் வழங்க உரிய நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார் .






