பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்க இறுதிக்கட்ட ஆய்வுக்கு ஒப்புதல்

இதன் மூலம் பொள்ளாச்சி பகுதிகளில் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.
பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்க இறுதிக்கட்ட ஆய்வுக்கு ஒப்புதல்
Published on

கோவை,

பொள்ளாச்சி ரெயில் நிலைய சந்திப்பு முதன் முதலில் கடந்த 1850-ம் ஆண்டுகளில் வணிக பயன்பாட்டிற்கான ரெயில் நிலையமாக பயன்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து 1915-ம் ஆண்டு பொள்ளாச்சியில் இருந்து போத்தனூருக்கு முதல் முறையாக ரெயில் சேவை தொடங்கியது. இந்த வழித்தடத்தில் அகலரெயில் பாதை பணிகள் மற்றும் மின் மயமாக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

தற்போது பொள்ளாச்சி வழித்தடத்தில் கோவை, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு, சென்னை, திண்டுக்கல், நெல்லை. திருச்செந்தூர், தென் காசி, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் பொள்ளாச்சி-போத்தனூர் வழித்த டத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்க இறுதிக்கட்ட ஆய்வுக்கு ரெயில்வே துறை ஒப்புதல் அளித்து உள்ளது. இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:- பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் டாப்சிலிப், வால்பாறை, பரம்பிக்குளம் போன்ற சுற்றுலா தலங்கள் இருப்பதால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதை தவிர மாசாணியம்மன் கோவில், கோவை மருதமலை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் போன்ற புகழ்பெற்ற ஆன்மிக தலங்களும் இருக்கின்றன.

ஆனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு தேவையான ரெயில் வசதி இல்லை. மேலும் பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தில் ஒரு ரெயில் பாதை மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதால் கூடுதலான ரெயில்களை இயக்குவதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி-போத்தனூர் வரையிலான வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்க இறுதிக்கட்ட ஆய்வுக்கு மத்திய அரசின் ரெயில்வே துறை ஒப்புதல் அளித்து உள்ளது. இது வரவேற்கதக்கதாகும்.

இரட்டை ரெயில் பாதை அமைத்தால் கோவை ரெயில் நிலையத்தில் நிறுத்த இடவசதி இல்லாமல், இயக்கப்படாமல் உள்ள ரெயில்களை பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க முடியும். இதனால் பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தில் இன்டர்சிட்டி, வந்தேபாரத் உள்ளிட்ட கூடுதலான ரெயில்களை இயக்க முடியும். மேலும் பொள்ளாச்சியில் இருந்து கோவை வழியாக ரெயில்களை இயக்குவதன் மூலம் ரெயில் வேக்கு வருவாய் அதிகரிக்கும். தற்போது உள்ள ரெயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.

பொள்ளாச்சி பகுதிகளில் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். பல இடங்களில் இரட்டை ரெயில் பாதை அமைத்ததால் காலதாமதமின்றியும், கூடுதலாக ரெயில்களை இயக்குவதற்கும் வசதியாக உள்ளது.

மேலும் மூடப்பட்ட கோவில்பாளையம், செட்டிப்பாளையம், நல்லட்டிபா ளையம் ரெயில் நிலையங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. நிலம் கையகப்படுத்துதல் தொடங்கி, இரட்டை ரெயில் பாதை பணிகளை முடிக்க கிட்டதட்ட 5 ஆண்டுகள் ஆகிவிடும். எனவே எதிர்கால ரெயில் தேவைகளை கருத்தில் கொண்டு உடனடியாக ஆய்வு பணிகளை முடித்து, இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com