தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ஒப்புதல்

அம்ரித் பாரத் ரெயிலில் ஒரே நேரத்தில் 1,834 பேர் வரையில் பயணிக்கலாம்.
தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ஒப்புதல்
Published on

சென்னை,

இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்களுக்கு இணையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான அம்ரித் பாரத் ரெயில்கள் தயாரித்து இயக்கப்பட்டு வருகிறது. இவை ஏ.சி. இல்லாத ரெயில் பெட்டிகளை கொண்டது. தமிழகத்தில் முதல் அம்ரித் பாரத் ரெயிலானது ஈரோடு - பீகார் ஜோக்பானி இடையே இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகம் - மேற்கு வங்கம் இடையே புதிதாக 3 அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - சந்திரகாச்சி, நாகர்கோவில் - ஜல்பாய்குரி இடையே அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

ஜல்பாய்குரி - திருச்சி இடையிலான அம்ரித் பாரத் ரெயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வழியாக இயக்கப்படும். நாகர்கோவில் - ஜல்பாய்குரி இடையிலான அம்ரித் பாரத் ரெயில் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, குண்டூர் வழியாக இயக்கப்படும்.

தாம்பரம் - சந்திரகாச்சி இடையிலான அம்ரித் பாரத் ரெயிலானது எழும்பூர், சூலூர்பேட்டை, நெல்லூர் வழியாக இயக்கப்படும். அடுத்த வாரம் இந்த ரெயில்களின் சேவை தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அம்ரித் பாரத் ரெயிலில் ஒரே நேரத்தில் 1,834 பேர் வரையில் பயணிக்கலாம். கண்காணிப்பு கேமரா, தகவல் தொடர்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com