ஏப். 1 தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் ஏப். 1 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏப். 1 தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
Published on

சேலம்,

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 வறண்ட ஏரிகளுக்கு எடுத்துச் சென்று நிரப்பும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மேட்டூர் அணையின் இடதுகரையில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொடங்கி வைத்தார். பின்னர் ரூ. 62 கோடியே 63 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.5 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் 23 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

தமிழகத்தில் ஏப். 1 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். தமிழகத்தில், கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இது தேர்தல் வாக்குறுதி அல்ல மக்களின் தேவை.

நீரேற்று திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 12 பொதுப்பணித்துறை ஏரிகள் மற்றும் ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகளில் நீர் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 238 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

இந்த திட்டத்திற்காக திப்பம்பட்டியில் இருந்து எம். காளிப்பட்டி ஏரி வரை 12 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணி முடிவடைந்து விட்டது. திப்பம்பட்டியில் மிக பிரம்மாண்ட நீரேற்று நிலையங்களும் அமைக்கும் பணியும் முடிவடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரேகரன், மேட்டூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை, மேட்டூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் லலிதாசரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com