

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 23 - தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
என்னுயிர் மக்களே! நம் தமிழ்நாட்டோட எதிர்காலத்தை நீங்கள் எழுதப் போற நாள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. உங்களுக்கு தெரியும். எது உண்மை, எது பொய். எது நடிப்பு, எது உழைப்பு. யார் நரி, யார் சிங்கம். அடிமைத்தனம் எது, தைரியம் எது. எல்லாமே உங்களுக்கு நல்லாவே தெரியும். இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருத்தருக்கும் ஒரு கடமை இருக்கு. என்னை நம்பி இந்த நாட்டை என்னிடம் கொடுத்தீர்கள். 5 வருஷத்தில் எத்தனையோ துறைகளில் தமிழ்நாட்டை முதலிடத்துக்கு நாம் ஒன்றாக கொண்டு வந்திருக்கிறோம்.
நாம் வீழ்த்தின எதிரிகளின் சதிகளை எண்ண ஆரம்பித்தால், அதற்குள் தேர்தல் முடிவே வந்து விடும். நம் திட்டங்களை, அதனால் விளைந்த நன்மைகளை பட்டியலிட ஆரம்பித்தால் அடுத்த தேர்தலே வந்து விடும். எனக்கு நீங்கள் கொடுத்த கடமையை என்னால் முடிந்த வரைக்கும் சரிவர செய்து விட்டேன். உங்களுடைய கடமை அதை நீங்களும் சரி வர செய்ய வேண்டும்.
அடுத்த 5 வருஷத்துக்கு இதுவரைக்கும் யாரும் காணாத ஒரு பெரிய கனவோடு காத்திருக்கிறேன். இனி நம் போட்டி டெல்லியோடு மட்டும் இருக்காது. தெற்காசியாவில் எல்லா துறைகளிலும் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி காட்டுவேன். மண், மொழி, மானம் மூன்றையும் காப்பாற்ற மூச்சிருக்கும் வரை போராடுவேன். வாக்களிப்பீர் உதயசூரியன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் சின்னங்களுக்கு. தமிழ்நாடு வாக்களிக்கும்! தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.